ஒரே பாரதம் உன்னத பாரதம்
குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
பாரதப் புதல்வர்கள் அனைவருக்கும் சுதந்திரத்திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வீடுதோறும் மூவர்ணக்கொடி இன்றைக்குப் பட்டொளி வீசிப் பறக்கிறது. இதற்காக கடந்த வாரம் அந்தமானில் ஸ்ரீவிஜயபுரத்தில் கொடிமுனையில் தேசியக்கொடி ஏற்றியதை எனது வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
அந்தக்கணம் முதலாக எனது நெஞ்சம் அந்தமான் மண்ணில் தனது வாழ்வைத் தியாகம் செய்த தியாகச்சுடர்களின் தியாகத்தாலும் நமக்காக சொல்லொன்னாத் துன்பங்களை சித்ரவதைகளை அனுபவித்த மாவீரர்களின் நினைவினாலும் நெகிழ்ந்துள்ளது.
கொடி முனையில் மூவர்ணக்கொடி வானளாவி உயர்ந்து பறந்த காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அந்தமான் மண்ணில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1943ஆம் ஆண்டு டிசம்பர் 30இல் மூவர்ணக்கொடியை ஏற்றிய நினைவுகள் அலையலையாய் எழுந்தன.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த நமது வீரர்களின் நினைவினால் பெருமிதம் தோன்றியது. தமிழ் வீரர்கள் அவர்களில் பெரும்பான்மையாக இருந்தார்கள் என்ற சிந்தனையும் அதற்கு ஊக்கமளித்த பசும்பொன் தேவர் அவர்களின் தேசியப் பற்றையும் எண்ணித் தலை வணங்கினேன்.
குறிப்பாக, நாடு முழுவதிலுமிருந்து நேதாஜியின் படையில் சேர வந்த ஐந்தாயிரம் வீராங்கனைகளுக்கும் மானசீகமாக எனது வீர வணக்கத்தைச் செலுத்தினேன். அதிலும் நான்காயிரம் வீராங்கனைகள் தமிழ்ப் பெண்கள் என்ற எண்ணத்தால் உள்ளம் பூரித்தது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவினைச் சுற்றிச் சுற்றி வந்து வணங்கினேன். தீவிலிருந்து படகில் ஏறுமுன் மீண்டும் ஒருமுறை ஓடிச்சென்று நேதாஜி அவர்கள் கம்பீரமாய் நின்று மூவர்ணக் கொடியேற்றி சுதந்திரத்தை அறிவித்த புனித மண்ணில் எனது வணக்கத்தைச் செலுத்தி விட்டு வந்தேன்.
நேதாஜி அவர்கள் மூவர்ணக்கொடியை ஏற்றிய இடத்தில் நின்ற போது எழுந்த தேசிய உணர்வுக்கான அதிர்வலைகளை எங்ஙனம் விவரிப்பேன்? இன்றைக்கும் அந்த மண்ணில் தியாகத்தின் வாசம் வீசுவதை எப்படி எடுத்துச் சொல்வேன்! சிறைப்பட்ட வீரர்கள் முழங்கிய ‘வந்தேமாதரம்’ காற்றில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டிருப்பதை என்னால் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா!
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே – இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? – இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?”
என்ற மகாகவி பாரதியின் பாடலை மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லிக்
கொண்டே நடந்தேன்.
தாய்நாடு என்ற சிந்தனையோடு நாட்டைக் காக்க நின்ற புதல்வர்கள் காலாபானி என்னும் செல்லுலார் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்களே, விவரிக்க இயலாத கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு அவர்கள் தேசத்தின் சுதந்திரத்திற்காகக் கனவு கண்டார்களே அந்த இடத்தைச் சென்று பார்த்தேன்.
செல்லுலார் சிறையில் வீர சாவர்க்கர் பத்தாண்டு காலம் அடைக்கப்பட்டிருந்தார், அவரது சொந்தச் சகோதரரும் அதே சிறையில் தான் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள இரண்டு ஆண்டு காலம் ஆகியிருக்கிறது என்றால் அடக்குமுறையின் கொடூரத்தை நாம் புரிந்து கொள்ளலாம். அன்றாடம் துன்புறுத்தல்களை அனுபவித்தும் கண்முன் மரணங்களையும் கொடுமைகளையும் கண்டும் மனம் தளராது தேசத்தின் விடுதலையை சிந்தித்த அந்த மாவீரர் அடைபட்டிருந்த அறையில் வணங்கியபோதும் தியானித்த போதும் அவர் விரும்பிய சமதர்ம சமூகத்திற்கான உத்வேகம் பெற்றேன்.
தேசமே முதன்மையானது என்ற சிந்தனை கொண்ட நூற்றுக்கணக்கான மாவீரர்கள் தடியடிகளைத் தாங்கிக்கொண்டு அடைபட்டிருந்த சிறைச்சாலையின் தாழ்வாரங்களில் நடந்த போது மனம் கனத்தது, நான் பிறந்த திருப்பூரில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த கொடிகாத்த குமரனின் நினைவு நெஞ்சை அழுத்தியது.
குமரன், ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் வறிய குடும்பத்தில் நாச்சிமுத்து முதலியாருக்கும் கறுப்பாயி அம்மாளுக்கும் செல்வ மகனாகப் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே திருப்பூர் வந்தவர்.
இளம் வயதிலேயே குமரனின் மனதில் தேசியக் கனல் கொழுந்து விட்டு வளர்ந்தது. சுயராஜ்யம் நமது பிறப்புரிமை என்ற எண்ணம் அவரை போராட்டக்களத்துக்கு அழைத்து வந்தது.
காந்திய சிந்தனைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட குமரன், ‘தேசபந்து வாலிபர் சங்கம்’ அமைத்து சுதந்திரத்திற்கான தாகத்தை மக்களிடையே ஏற்படுத்த முயன்றார். அடிமைப்பட்டுக் கிடக்கும் தங்கள் நிலையை உணர்ந்து மக்கள் எழுச்சி கொள்ள வேண்டுமானால் சிந்தையில் தெளிவு வேண்டும் என்று சிந்தித்தார். மதுவிலக்குக் கொள்கையைத் தேர்ந்தெடுத்தார்.
மதுவிலக்குப் போராட்டத்தில் கள்ளுக்கடை மறியல் நடத்தினார். கோபமடைந்த மது விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட குமரன் தலையிலேயே மதுப் பானையைப் போட்டு உடைத்தார்கள். அப்போது பானையின் கழுத்து வளையம் குமரன் கழுத்தில் மாட்டிக் கொண்டது. கழுத்தில் பானை வளையத்தோடு பெருமிதம் பொங்க திருப்பூர் வீதிகளில் வலம் வந்தார் குமரன். வலியைக் காட்டிலும் சீர்திருத்தத்திற்கான விழிப்புணர்வே அவரது கவனத்தில் இருந்தது. எண்ணம் சொல் சிந்தனை செயல் அனைத்தும் சுதந்திரம், தேசத்தின் மேன்மை என்பதாக மட்டுமே இருந்தது.
தேசத்தை நேசித்த குமரனை நேசிக்க ராமாயி அம்மாள் மனம் துணிந்தார்கள். குமரனின் திருமணம் ராமாயி அம்மாளுடன் நடந்தேறியது. மனைவியோடு உறவாடுவதை விட களத்தில் போராடுவதே குமரனுக்கு விருப்பமானதாக இருந்தது.
சட்டமறுப்பு இயக்கம் தீவிரமடைந்திருந்த காலம். பிரிட்டிஷ் அரசின் கொடூரமான அடக்குமுறைகளால் மக்கள் பீதியில் உறைந்திருந்த நேரம், 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் சுதந்திர எழுச்சிக்கான ஊர்வலத்தில் கைகளில் கொடியை ஏந்திக் கொண்டு நடந்தார் குமரன். பி.எஸ். சுந்தரம், ராமன் நாயர், நாச்சிமுத்துக் கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்துச் செட்டியார், சுப்பராயன், அப்புக்குட்டி, நாராயணன் உள்ளிட்ட வெகுசில தியாகிகள் மட்டுமே ஊர்வலத்தில் உடன் நடந்தார்கள். வந்தேமாதரம் என்ற அவர்களின் முழக்கம் மக்கள் மனங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
காவல் துறையினர் ஆவேசத்தோடு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். குமரனை குண்டாந்தடியால் பலமாகத் தாக்கினர். ‘வந்தேமாதரம்’ என்ற கோஷத்துடன் குமரன் அடிகளைத் தாங்கிக்கொண்டு முன்னேறினார். தலையில் அடித்தால் நிலைகுலைந்து போவான் என்று எண்ணிய காவல்துறையினரின் வெறிகொண்ட தாக்குதலால் குமரனின் மண்டையோடு உடைந்தது. மண்டையோட்டுச் சில் இரண்டரை சென்டிமீட்டர் தலைக்குள் இறங்கியது. குமரன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கீழே விழுந்தார். அவரது உதடுகள் வந்தேமாதரம் என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தன.
அந்த நேரத்திலும் கையில் பிடித்திருந்த கொடியை விடவேயில்லை. குமரன் கைகளில் இருந்து கொடியை இழுத்துப் பறிக்க காவல் துறையினர் முயன்றனர், முடியவில்லை. தடியால் அடித்து மண்டையோட்டை உடைக்கும் அளவுக்கு பலம் கொண்டிருந்த அவர்களால் குமரனின் கையிலிருந்த கொடியைப் பறிக்க முடியவில்லை என்றால் குமரனின் தேசபக்தியை, அவரது ஆன்ம பலத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
பிரிட்டிஷார் மீது கொண்டிருந்த அச்சத்தால் மருத்துவர்கள் குமரனுக்கு மருத்துவம் பார்க்கத் தயங்கினார்கள். மருத்துவர் ரங்கநாதன் மட்டும் தேசபக்தனைக் கைவிட விரும்பவில்லை. மண்டையோடு உடைந்துவிட்டதால் மருத்துவ சிகிச்சை பலனளிக்கவில்லை. விடியவிடிய மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. நாட்டுக்காகப் போராடிய குமரன் சுதந்திரத்திற்காகத் தன் உயிரையே தியாகம் செய்து அமரரானார். அப்போது அவரது வயது 27 தான்.
மகாகவி பாரதி நம்பிக்கையோடு,
“காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்”
என்று பாடியதை மெய்ப்பித்தார் கொடி காத்த குமரன்.
1942ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியடிகள் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் தொடங்கி, “செய் அல்லது செத்துமடி” என்ற உணர்வு பூர்வமான முழக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்கினார். காந்தியடிகளின் இந்த அறைகூவலின் விளைவாக, நாடு முழுவதும் சுதந்திர வேட்கை கட்டுக்கடங்காமல் பரவியது. அதன் விளைவாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திர தேசமாக மலர்ந்தது.
திருப்பூரில் குமரன் கொடி தாங்கி நடந்த வீதியில் நடக்கும் போதெல்லாம் அதே மண்ணில் பிறந்ததற்காக எனக்குள் பரவசம் தோன்றும். அந்தப் பரவசம் சுதந்திரத் திருநாளான இன்றும் நிறைந்திருக்கிறது.
இன்று மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதற்கு ஆதாரமாக, பாரதத்தின் மேன்மைக்காக முன்னெடுக்கப்பட்ட மகத்தான தியாகத்தின் வரலாறும், எண்ணற்ற போராட்டங்களின் சுவடுகளும், மாபெரும் வீரர்களின் உதிரமும் இருப்பதை உணர வேண்டிய தருணம் இது.
அவர்கள் வழியில் தேசமே முதன்மையானது என்ற சிந்தனையும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வும் கொண்டு இன்றைய தலைமுறை தேசத்தின் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். தீரத்தோடு போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த வீரர்களுக்கு அதுவே நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!