Close

    நீலப் புரட்சி – வாய்ப்புகளின் பெருங்கடல்

    Publish Date : September 17, 2026

          திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

    நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைமை, பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்தை சிறப்பாகவும் எல்லோர் நலனையும் உள்ளடக்கியதாகவும் கொண்டு பீடு நடை போடுகிறது. கடந்த 12 ஆண்டுகளில், அவர் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக நலிந்த, பின்தங்கிய பிரிவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

     பிரதமரின் அணுகுமுறை எல்லோருக்கும் முன்மாதிரியானது. நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களை, வளர்ச்சிக்கான ஆர்வமுள்ள மாவட்டங்களாக (Aspirational Districts) அறிவித்ததும், எல்லையோர கிராமங்களை ‘துடிப்பான மற்றும் முதன்மையான கிராமங்கள்’ (Vibrant and First Villages) என்று அறிவித்ததும், வடகிழக்குப் பிராந்தியத்தை ‘அஷ்டலட்சுமி’ என்று குறிப்பிட்டதும் ஓர் உணர்வுப் பூர்வமான பாரத தேசத்தின் மீதான மாறுபட்ட பார்வைக்கும் அணுகுமுறைக்கும், ஒற்றுமைக்கும் அற்புதமான உதாரணமாகத் திகழ்கிறது.

    இந்த அணுகுமுறை, நாதியற்று பின்தங்கிய பகுதிகளாக இருந்த பிராந்தியங்களை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முன்னேறுகின்ற பகுதிகளாகவும் வளர்ச்சிக்கான முனைப்பை கொண்ட பகுதிகளாகவும் மாற்றியுள்ளது. இதனால்  2047 இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உன்னத இலக்கு எல்லாத்தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய வெற்றிகரமான பயணமாக அமைகிறது.

       நேரடியாக மக்களை சென்றடையும் பல்வேறு திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மீது அவருக்கு இருக்கின்ற அர்ப்பணிப்பு உணர்வை இவை வெளிப்படுத்துகின்றன.

    25 கோடி ஏழை மக்கள் கடும் வறுமையிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். இது பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாற்றிலும் முக்கிய மைல்கல். உலகம் முழுவதும் வறுமையின் கொடுமையிலிருந்து விடுபடும் நாள் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடிஜியின் இந்த சாதனை மனித குலத்திற்குத் தருகிறது..

       மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நம்நாடு கண்ட பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சியை அடுத்து நீலப் புரட்சியை உருவாக்க உறுதி பூண்டு  முழு கவனத்தையும் அதன் மீது செலுத்துவது மற்றொரு முன்னேற்றகரமான அம்சமாகும். 1960-களில் ‘பசுமைப் புரட்சி’ நம் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்களை  வெற்றி கொள்வதற்கான சூழலை உருவாக்கியது. இன்று நம் பாரதம் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது.

       பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து ‘வெண்மைப் புரட்சி’, நீண்டகாலமாக நம் நாட்டில் நிலவி வந்த பால் பற்றாக்குறையையும், பால் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலையையும் மாற்றிக் காட்டியது. இன்று நம் பாரத தேசம் பால் உற்பத்தியில் உலகின் முதல் நாடாக உருவாகியுள்ளது.

       மோடி அவர்களின் நீலப் புரட்சி மற்றொரு மகத்தான வெற்றி சரித்திரத்தை உருவாக்கப் போகிறது. வளமான கடல்சார் பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. ஏறக்குறைய 24 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள கடல் இறைவன் நமக்கு கொடுத்த கருணை வரம்.

    இதுவரை, கடல் வளத்தின் பெரும்பகுதியை முறையாக நாம் பயன்படுத்தவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. நமது மீன்பிடி நடவடிக்கைகள் பெரும்பாலும் கடற்கரைக்கு அருகிலேயே இருந்தன. இன்று, நாம் அடிவானத்திற்கு அப்பால் பார்க்கத் தயாராகிக் கொண்டு இருக்கிறோம். மீன்பிடி தொழிலில் புதிய பரிமாணங்களை காண இருக்கிறோம். இந்த நீலப்புரட்சி நம் மீனவர்களின் பொருளாதார நிலையில் ஒரு யுகப்புரட்சியாக அமைய போகிறது. நமது சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் ஆழ்கடல் மீன்பிடிப்பு, துனா மீன் போன்ற உயர் மதிப்புள்ள மீன்களை பிடிப்பதற்கான பெரும் வாய்ப்பாக அமையப் போகிறது. துனா (சூரைமீன்கள்) மீன்களுக்கு ஜப்பானில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது.

         2019-ஆம் ஆண்டில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் மூலம், திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையின் கீழ் மீன்வளத் துறைக்கு முதன்முறையாக மத்திய அரசில் தனி அமைச்சகத்தை நம்நாடு பெற்றது. பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்த நீலப்புரட்சியை முன்னெடுக்கும் போது நமது தேசியக் கொடியில் இருக்கும் நீலநிற சக்கரம் கடல்சார் பொருளாதார ஆற்றலை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்கள். இது பாரதப் பிரதமருக்கு நம்  மீனவர்கள் மீது இருக்கும் பெரும் அக்கறையை பிரதிபலிக்கிறது.

       கடந்த பத்தாண்டுகளில், பாரதத்தின் கடல் மீன்வளம் மற்றும் உள்நாட்டு மீன்வளத்தை பெருக்குவதற்காக மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு பன்முக நடவடிக்கை எடுத்து ஊக்குவித்து வருகிறது. இதனால் மீன்வளத் துறை நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறையாக மாற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.

      இன்று மீன் உற்பத்தியில் உலகத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக பாரத தேசம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த உலக மீன் உற்பத்தியில் எட்டு (8%) சதவீத பங்களிப்பை வழங்கும் நாடாக வளர்ந்திருக்கிறது.

        ஏறத்தாழ 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதோடு, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தத் துறை வழங்குகிறது. 2024-25 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தி 195 லட்சம் டன்களுக்கும் அதிகமாக உயர்ந்து அபாரமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

        மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சரித்திர நிகழ்வு ஆழ்கடலில் மீன்பிடிப்பு என்ற புதிய சகாப்தம் பாரத தேசத்தில் முதன்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

       பாரத தேசத்தின் பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்கடலில் நம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான நவீன விஞ்ஞானத்தை இது வழங்குகிறது. ஒடிசாவில் இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று தொடங்கி வைத்ததில் பெருமை அடைகின்றேன்.

       இந்த நிகழ்வில் நம் பாரத மீனவர்களுக்கு பாரத தேசத்தின் கொடியுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடிப்பு கப்பல்களுக்கான அங்கீகாரக் கடிதம் வழங்கப்பட்டது. இது ஒரு புதிய சரித்திரத்தின் தொடக்கமாக அமைகிறது. ஏனெனில் நாம் இதுவரை ஆழ்கடல் மீன் பிடிப்பதில் கவனத்தை செலுத்தவில்லை. இந்தத் தொடக்கம் நீலபுரட்சியின் பெருமைமிகு தொடக்கமாக அமைகிறது.

      ஆழ்கடல் மீன்பிடிப்பு துறையில் நாம் முன்னேறுகிற போது எதிர்கால மீன்வளத்தை கட்டிக் காக்க வேண்டும் என்ற கடமை உணர்வோடு மத்திய அரசு தனது வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறது.

       கடந்த மாதம் லட்சத்தீவுகளுக்கு நான் சென்றிருந்த போது, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் கீழ் லட்சத்தீவிற்கான பல மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிகழ்வில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர்களோடு கலந்து கொன்டேன். அப்போது நம் பாரதத்தில் மீனவர்களின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

      பாராளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை 2025-26, ஆழ்கடல் மீன்வளத்தை தரமான முறையில் பயன்படுத்துவதற்கான சரியான திட்டத்தை நிதியமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இந்த முற்போக்கான திட்டம், நமது மீனவர்கள் புதிய எல்லைகளில் நம்பிக்கையுடன் பயணிக்க வழிவகுக்கிறது. ஒரு தேசம் புதிய சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கும் போது அந்த தேசத்தின் வளர்ச்சி மகத்தானதாக மாறுகிறது.
    நமது மீனவர்களை மையமாகக் கொண்ட நீலப்புரட்சி எனும் சித்தாந்தத்தின் முயற்சிகள் கடல்சார் மீன்வள வணிகத்தில் மிகப் பிரமாண்டமான சரித்திர மாற்றத்தை கொண்டுவரப் போகிறது.

    நமது லட்சத்தீவின் சிறப்பு:

    நமது லட்சத்தீவு மட்டும் ஏறத்தாழ 32 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும், 145 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையையும், சுமார் 4,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காயல் பகுதியையும் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பிராந்திய கடல் பகுதியையும் ஏறத்தாழ நான்கு (4 )லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் உள்ளடக்கியதாக பரந்து விரிந்துள்ளது.

         பாரதத்தின் மொத்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கை லட்சத்தீவு மட்டுமே கொண்டுள்ளது. இது நமது கடல்சார் வளத்தின் வலிமையாகும். தனிநபர்கள் தனியாகச் செயல்படும்போது முன்னேற்றம் காண முடியும், மறுக்கவில்லை. ஆனால், எல்லோரும் இணைந்து கூட்டாக செயல்படும் போது  தான் அது யுகப் புரட்சியை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இத்தகைய யுகப் புரட்சி தான் நீலப்புரட்சி என்பதில் ஐயமில்லை.

          பாரதத்தின் கடல்சார் உணவுப் பொருட்கள் இன்று 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், நமது  கடல்சார் உணவு ஏற்றுமதி 73,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். இது நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 2013-2014-ஆம் ஆண்டிலிருந்து 140%-க்கும் அதிகமான வளர்ச்சி ஆகும்.  இந்த வளர்ச்சி நமது கடல் உணவுப் பொருட்களின் தரத்தின் மீது உலகம் கொண்டுள்ள நம்பிக்கையை  உணர்த்துகிறது.

         ஆழ்கடல் மீன்பிடிப்பு (High Seas fishing) முன்னெடுப்பானது, ஏற்றுமதி வளர்ச்சியில் பல மடங்கு உயர்வைத் தர இருக்கிறது.

         ஆழ்கடல் மீன்பிடிப்பு (High Seas fishing) முன்னெடுப்பானது, ஏற்றுமதி வளர்ச்சியில் பல மடங்கு உயர்வைத் தர இருக்கிறது.

         நாம் வளர்ச்சியைத் தொடரும்போது, இயற்கையின் மீதான நமது பொறுப்பை மறந்துவிடலாகாது. கடல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்திற்கு ஊட்டமளித்து வருகிறது. இனிவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதனைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

       அந்த வகையில் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் அமைந்திருப்பது சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான மீன்பிடி விதிகள் மற்றும் 2025-ஆம் ஆண்டிற்கான மீன்பிடி வழிகாட்டுதல்கள் பாரத மீனவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள், உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மீனவர்களுக்கு ‘அனுமதி கடிதங்களை’ (Letters of Authorisation) வழங்கியிருப்பது மீன்பிடி தொழிலில் புதிய முன்னோட்டத்திற்கு அடிகோலுகிறது.

           நவீன மயமான ஆழ்கடல் மீன்பிடிப்பு, குளிரூட்டப்பட்ட சாதனங்களின் மூலமாக மீனைப் பதப்படுத்துவது, அதை ஏற்றுமதித் தரத்தோடு பாதுகாப்பது, முறையாகப் பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்வது என்ற மத்திய அரசின் சிந்தனைகள்  மூலமாக பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது கடலோரம் வாழும் மக்களின் வாழ்வில் புதிய ஏற்றத்தை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

        கடல்சார் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் உயர்ந்த சிகரங்களை பாரத தேசம் எட்டும். நீண்ட நெடிய கடற்கரையைக் கொண்டுள்ள பாரத தேசத்தின் மீனவப் பெருமக்களின் வாழ்வில் இந்த நீலப்புரட்சி மகத்தான பொருளாதார மாற்றத்தை உண்டாக்கும். முன்னேறிய பாரதத்தின் அங்கமாக இந்த நீலப்புரட்சி மாறுகிற போது மீன்வளத்துறையில் பாரத தேசம் உலகத்தின் முதல் இடத்தைப் பிடிக்கும்.

        நம்பிக்கையுடன் நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்கும். அதில் நீலப் புரட்சியின் பங்கு மகத்தானதாக இருக்கும். இந்த நீலப்புரட்சி பிரதமரின் ஆழ்மனதில் உதித்த மற்றுமொரு உயரிய சிந்தனையாகும்.

                                 ……………………………………………………………